பெண்கள் நலன்

பெண்களுக்கு அரசு பேருந்தில் கட்டணமில்லா பயணம்

பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர், திருநங்கையர் உட்பட அனைத்து மகளிரும் தமிழ்நாடு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி 2021 ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருமண உதவித் திட்டங்கள்

பெரும்பாலான சமூகங்களில், திருமணத்தின் போது ஒரு பெண் தங்கத்தால் செய்யப்பட்ட “திருமாங்கல்யம்” அணிவது ஒரு வழக்கமான கலாச்சாரத் தேவையாகும், மேலும் பெற்றோர்கள் அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சார பின்னணியின்படி திருமண விழாவைக் கொண்டாடுகிறார்கள். இருப்பினும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். அத்தகைய பெற்றோருக்கு உதவவும், அவர்களின் மகள்களை சரியான வயது வரை படிக்க ஊக்குவிக்கவும், அரசால் திருமண உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏழைப் பெற்றோரின் மகள்கள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் கைம்பெண்கள் , கலப்புத்திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் மற்றும் கைம்பெண்களின் மகள் ஆகியோருக்கு உதவும் வகையில் திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

திருமண உதவித் திட்டங்களின் கீழ் உதவி பெறுவதற்கான தகுதி அளவுகோல்கள்

திட்டம்-I

கல்வித் தகுதி: மணமகள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், பழங்குடியினராக இருந்தால் மணமகள் V வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.

பண உதவி: ரூ. 25,000 மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும், 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.

திட்டம்-II

கல்வித் தகுதி: கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள், தொலைதூரக் கல்வி / அரசு அங்கீகாரம் பெற்ற திறந்த நிலைப் பல்கலைக்கழகம் படித்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்கள். பட்டயம் படித்தவர்கள் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பண உதவி: மின்னணு பரிவர்த்தனை மூலம் 50,000 செலுத்தப்படும், , 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.

1. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம்

2022 -2023 ஆம் ஆண்டு முதல், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில், உயர் கல்வியில் சேர்ந்துள்ள அனைத்து பெண் குழந்தைகளுக்கும் ரூ.1000/- மாதந்தோறும் அவர்கள் பட்டப்படிப்பு முடியும் வரை பெற தகுதியுடைவர்கள்.

2. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம்

இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு 8 கிராம் 22 காரட் தங்க நாணயத்துடன் மின்னணு மூலம் ரூ.15,000 நிதியுதவியும், தேசிய சேமிப்புச் சான்றிதழாக ரூ.10,000ம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற வருமான உச்சவரம்பு மற்றும் கல்வித் தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. பட்டம்/பட்டயம் படித்தவர்களுக்கு ரூ.50,000, அதில் ரூ.30,000 மின்னணு மூலமாகவும், `20,000 தேசிய சேமிப்புச் சான்றிதழுடன், 8 கிராம் 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

3. .வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.25,000/- நிதியுதவியும், 8 கிராம் தங்க நாணயமும் பயனாளிக்கு வழங்கப்படுகிறது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டப்படிப்பு எனில் ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

4. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம்

இந்தத் திருமண உதவித் திட்டத்தின் கீழ், பயன் பெறுவதற்கு வருமான உச்சவரம்பு மற்றும் குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ணயிக்கப்படவில்லை. பயனாளிகளுக்கு ரூ.25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், பட்டப்படிப்பு எனில் ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

5. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் மணமகள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ரூ.25,000 நிதியுதவில், ரூ.15,000 மின்னணு மூலமாகவும், ரூ10,000 தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும், 8 கிராம் 22 காரட் தங்க நாணயத்துடன் வழங்கப்படுகிறது. பட்டம்/பட்டயப்படிப்பு பெற்றவர்களுக்கு ரூ.50,000, அதில் ரூ.30,000 மின்னணு மூலமாகவும், ரூ.20,000 தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும், 8 கிராம் 22 காரட் தங்க நாணயத்துடன் வழங்கப்படுகிறது. வருமான உச்சவரம்பு மற்றும் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

கலப்பு திருமணத்தின் வகைகள்

வகைI : கலப்பு திருமண தம்பதிகளின் துணைவர்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருக்க வேண்டும் அதே சமயம் மற்ற ஒருவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

வகைII: வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் முன்னேறிய அல்லது பொதுப்பிரிவை சேர்ந்தவர்களாகவும், மற்ற ஒருவர் பிற்பட்ட/மிகவும் பிற்பட்ட வகுப்பை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டம் வழங்கும் திட்டம்:

கைம்பெண், கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத் திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள், சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு சுய வேலைப்வாய்ப்பு மூலம் வருமானத்தை உயர்த்தும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இலவச சீருடை வழங்கும் திட்டத்துக்கான துணிகள், சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 32 வெட்டும் மையங்களுக்கு ஜவுளி மற்றும் கைத்தறி துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இம்மையங்களில் வெட்டப்படும் துணிகள், சீருடை தைக்க சம்பந்தப்பட்ட தையல் சங்கங்களுக்கு வழங்கப்பட்டு, தைக்கப்பட்ட சீருடைகள் கல்வித்துறையின் 413 உதவி கல்வி அலுவலர்கள் மற்றும் 67 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு இந்த சங்கங்கள் மூலம் வழங்கப்படுகிறது.

சேவை இல்லங்கள்

கைம்பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் மற்றும் குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட சிறுமிகள், குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட பெண்கள் சேவை இல்லங்களில் பராமரிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் செங்கல்பட்டு, சேலம், கடலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, சிவகங்கை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் தலா ஒன்று என ஏழு அரசு சேவை இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. சேவை இல்லங்கள் தங்குமிடம், உணவு, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குகின்றன. உள்ளுரைவோர் தடைப்பட்ட பள்ளிப்படிப்பைத் தொடரலாம். கைம்பெண்கள் மற்றும் கைவிடப்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளை இந்த சேவை இல்லங்களில் வசதியான சூழ்நிலையில் வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு தாயால் அதிகபட்சமாக மூன்று குழந்தைகளை வைத்திருக்க முடியும். பெண் குழந்தைகளுக்கு பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வி அளிக்கப்படும். அதே வேளையில், ஆண் குழந்தைகளுக்கு ஐந்தாம் வகுப்பு வரை சேவை இல்லத்திலேயே கல்வி வசதி வழங்கப்படுகிறது. இப்பெண்கள் பொருளாதார நிலைத்த தன்மையைப் பெறுவதற்கு தொழில் திறன்களும் வழங்கப்படுகின்றன. வாழ்க்கைத் திறன்களான கணினிப் பயிற்சி, ஆங்கிலம் பேசுதல் மற்றும் உயர் படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் எதிர்கால வாழ்க்கை வழிகாட்டுதல் ஆகியவை இந்த இல்லங்களில் வழங்கப்படுகின்றன.

பெண்களுக்கான உயர்கல்வி

உயர் கல்வியைத் தொடர, சேவை இல்லங்கள் மற்றும் அரசு குழந்தைகள் இல்லங்களில் +2 முடித்த முன்னாள் உள்ளுரைவோருக்கு தொழில்சார் படிப்புகளைத் தொடர 50,000 ரூபாயும், பட்டம் / பட்டய படிப்புகளுக்கு 30,000 ரூபாயும் அரசு நிதியுதவி வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் 26 அரசு குழந்தைகள் இல்லங்கள் மற்றும் 7 சேவை இல்லங்களில் இருந்து பல பெண்கள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், அரசு குழந்தைகள் இல்லம், அரசு சேவை இல்லம் மற்றும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் பயனாளிகளுக்கு மின்னணு மற்றும் மின் நுகர்வோர் சாதனங்கள், குழாய்கள் பழுது பார்ப்பது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.