சேவை இல்லங்கள்

கைம்பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் மற்றும் குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட சிறுமிகள், குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட பெண்கள் சேவை இல்லங்களில் பராமரிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் செங்கல்பட்டு, சேலம், கடலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, சிவகங்கை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் தலா ஒன்று என ஏழு அரசு சேவை இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. சேவை இல்லங்கள் தங்குமிடம், உணவு, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குகின்றன. உள்ளுரைவோர் தடைப்பட்ட பள்ளிப்படிப்பைத் தொடரலாம். கைம்பெண்கள் மற்றும் கைவிடப்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளை இந்த சேவை இல்லங்களில் வசதியான சூழ்நிலையில் வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு தாயால் அதிகபட்சமாக மூன்று குழந்தைகளை வைத்திருக்க முடியும். பெண் குழந்தைகளுக்கு பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வி அளிக்கப்படும். அதே வேளையில், ஆண் குழந்தைகளுக்கு ஐந்தாம் வகுப்பு வரை சேவை இல்லத்திலேயே கல்வி வசதி வழங்கப்படுகிறது. இப்பெண்கள் பொருளாதார நிலைத்த தன்மையைப் பெறுவதற்கு தொழில் திறன்களும் வழங்கப்படுகின்றன. வாழ்க்கைத் திறன்களான கணினிப் பயிற்சி, ஆங்கிலம் பேசுதல் மற்றும் உயர் படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் எதிர்கால வாழ்க்கை வழிகாட்டுதல் ஆகியவை இந்த இல்லங்களில் வழங்கப்படுகின்றன.

பெண்களுக்கான உயர்கல்வி

உயர் கல்வியைத் தொடர, சேவை இல்லங்கள் மற்றும் அரசு குழந்தைகள் இல்லங்களில் +2 முடித்த முன்னாள் உள்ளுரைவோருக்கு தொழில்சார் படிப்புகளைத் தொடர 50,000 ரூபாயும், பட்டம் / பட்டய படிப்புகளுக்கு 30,000 ரூபாயும் அரசு நிதியுதவி வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் 26 அரசு குழந்தைகள் இல்லங்கள் மற்றும் 7 சேவை இல்லங்களில் இருந்து பல பெண்கள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், அரசு குழந்தைகள் இல்லம், அரசு சேவை இல்லம் மற்றும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் பயனாளிகளுக்கு மின்னணு மற்றும் மின் நுகர்வோர் சாதனங்கள், குழாய்கள் பழுது பார்ப்பது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.