மூன்றாம் பாலின நலன்

திருநங்கையர் குடும்பத்தினரால் நிராகரிப்பு, சமூக பாகுபாடு மற்றும் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுதல் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர். அவர்கள் பல்வேறு துன்புறுத்தல்கள், இழப்புகள் மற்றும் பிற வகையான பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். திருநங்கையராக மாற்றமடைந்த பின்னர் அவர்கள் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். காலம் காலமாக நடைப்பெறும் பாகுபாடு காரணமாக அவர்களுக்கு வேலையில் பாதுகாப்பும் மற்றும் வேலை வாய்ப்பும் இல்லை. தற்காலத்தில் உள்ள சூழ்நிலைகள் அவர்களை குடும்பத்தை விட்டு வெளியேறவும், கல்வியை இடைநிறுத்தவும், கிட்டத்தட்ட நாடோடி வாழ்க்கை வாழவும் கட்டாயப்படுத்துகின்றன. குடும்பத்தை விட்டு வெளியேறும் திருநங்கையரிடம் பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அத்தியாவசிய அடையாள அட்டைகள் போன்ற எந்த ஆவணங்களும் இருப்பது இல்லை.

திருநங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டும், அவர்களின் குறைகளை நலத்திட்டங்கள் மூலம் தீர்க்கவும், திருநங்கையர்களுக்கான நல வாரியத்தை அரசு அமைத்துள்ளது. திருநங்கையர் எதிர்கொள்ளும் முதன்மையான இடர்பாடு கௌரவமான மற்றும் மரியாதைக்குரிய தொழில் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுவதாகும். இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் திருநங்கையர் நலவாரியம் 15.04.2008 அன்று ஏற்படுத்தப்பட்டு திருநங்கையர்களை பொருளாதார ரீதியாக மேம்பட, அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா, குடியிருப்பு வீடுகள், இலவச தையல் இயந்திரம், உயர்கல்வி பயில உதவி, சுய உதவி குழுக்கள், சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி, இலவச திறன் பயிற்ச்சி, வருமானத்தை ஈட்டும் தொழில் செய்திட ரூ.50,000/- வரை மானியம் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

மளிகைக் கடைகள், கறவை மாடுகளை வளர்ப்பது, சிற்றுண்டிச்சாலை, சோப்பு, நாப்கின்கள், பால் பொருட்கள் உற்பத்தி அலகுகள், பயணிக்கும் ஆட்டோக்கள், சுமை ஆட்டோக்கள் மற்றும் துணி, தென்னை நார், அரிசி போன்ற வணிக நடவடிக்கைகள் போன்ற பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் திருநங்கையர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருநங்கையர் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்திட “திருநங்கைகள்” என்னும் தனிப்பட்ட கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டு எளிய முறையில் அடையாள அட்டை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்செயலி மூலமாக திருநங்கையரின் வயது, கல்வித் தகுதி, இருப்பிட விவரம் போன்ற விவரங்கள் பெறப்படுவதால் அவர்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்கிட உதவி புரிகிறது.