தொட்டில் குழந்தை திட்டம்

பெண் சிசுக்கொலையை ஒழிக்கவும், பெண் குழந்தைகளை மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்றவும், 1992ல், சேலம் மாவட்டத்தில், தொட்டில் குழந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பெண் சிசுக்கொலை நடைமுறையில் இருந்த மதுரை, தேனி, திண்டுக்கல், தர்மபுரி மாவட்டங்களுக்கும், 2001 ஆம் ஆண்டு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, கடலூர், அரியலூர், பெரம்புலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதம் அபாயகரமான அளவில் குறைந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளது. இதற்கு பல்வேறு சமூகப் பொருளாதார காரணங்கள் கூறப்படுகின்றன. இதை உணர்ந்து, இந்த எதிர்மறையான போக்கை சரிசெய்ய, தொட்டில் குழந்தை திட்டம் இந்த மாவட்டங்களுக்கும் 2011 ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது.

தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ், மீட்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுக்கும் திட்டங்களின் கீழ், மாற்றுக் குடும்பத்துடன் மறுவாழ்வு பெறுகின்றனர். புதுமையான தொட்டில் குழந்தை திட்டம் இந்தியாவிலும் மற்ற நாடுகளிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் தொட்டில் குழந்தைத் திட்டத்தின் நேர்மறையான விளைவு, 2001 இல் 942/1000 ஆக இருந்த குழந்தை பாலின விகிதம் 2011 இல் 943/1000 ஆக உயர்ந்துள்ளது.