எங்களை பற்றி

தமிழ்நாடு ஒரு துடிப்பான வளர்ச்சிக் கட்டத்தில் உள்ளது, மாநில அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து அவர்களின் இன்னல்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலமாக பல கட்டமாக நிவர்த்தி செய்கிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையானது ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவரின் நலனை எப்போதும் உறுதி செய்து வருகிறது. அவர்களின் உடல்நலம், ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவை பல்வேறு சமூக நலத் திட்டங்கள் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளன. கௌரவமான வாழ்க்கை வாழ்வதற்கான எண்ணற்ற வாய்ப்புகளும் வசதிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பெருமளவில் பயனடையும் வகையில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், தொட்டில் குழந்தைத் திட்டம், குழந்தை தத்தெடுப்பு, திருமண நிதி உதவித் திட்டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், அரசு சேவை இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் போன்ற திட்டங்கள் மூலம் அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை நோக்கமாகக் கொண்ட விரிவான உத்தியை இந்தத் துறை தொடங்கியுள்ளது.

முதியோர் இல்லங்கள், பகல்நேர பராமரிப்பு மையம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த வளாகங்கள் போன்ற திட்டங்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் சமுதாயத்தில் இணைத்தல் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு சேவைகள் செயல்படுத்துவதன் மூலம் மூத்த குடிமக்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் தொடர்பான பிரச்சினைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சமூக நலத் துறையானது குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்-2006, வரதட்சணைத் தடைச் சட்டம், 1961, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007, பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம், 2013 போன்ற பெண்களுக்கான பல்வேறு சமூகச் சட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இச்சட்டங்களில் பெண்களுக்கு உள்ள வழிவகைகளின் மூலம் பெண்கள் பெரிதும் பயனடைவதை உறுதி செய்திடும் வகையில் , பெண்கள் மற்றும் சமூகத்தின் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.