மாநில பெண்கள் வள மையம்

மாநில பெண்கள் வள மையம்

1. மாநில பெண்கள் வள மையம்

மாநிலங்களில் உள்ள துறைகளில் பெண்களுக்கு முழுமையான அதிகாரமளிப்பதற்கான பணிகளை மேற்கொள்வதே மாநில பெண்கள் வள மையத்தின் முதன்மையான நோக்கமாகும். இது அரசு மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் தொடர்பான பிற துறையினரை சிறப்பாக ஒருங்கிணைத்து பாலின உணர்வுத் திட்டங்கள், சட்டங்கள் மற்றும் நல திட்டங்களை செயல்படுத்த உதவுகிறது. பெண்களை பாதிக்கும் தற்போதைய கொள்கைகள், திட்டங்கள் மற்றும் சட்டங்களை தொடர்ந்து மதிப்பாய்வு மற்றும் மதிப்பீடு செய்து, பொருத்தமான நடவடிக்கைகளை மாநில அரசு மற்றும் பெண்களுக்கான தேசிய வள மையத்திற்கு பொருத்தமான பரிந்துரைகளை கொண்டு செல்கிறது.

பெண்கள் தங்களுக்கான திட்டங்களின் தேவையை உணர்ந்து அரசிடம் கோருவதற்கான சூழலை விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் மாநில பெண்கள் வள மையம் ஏற்படுத்துகிறது. மற்றும் தேவைக்கும் வழங்கலுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது.

தேசிய பெண்களுக்கான அதிகாரமளித்தல் இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் மாநில பெண்கள் வள மையம் சமூக நல இயக்குநரகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநில பெண்கள் வள மையத்திற்கு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு 27.01.2014 முதல் பல்வேறு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

2. ஒருங்கிணைந்த சேவை மையம்.

மத்திய அரசால் செயல்படுத்தப்படும் “சகி” என்னும் ஒரு சிறப்புத் திட்டமானது தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, உதவிடும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. உடல் ரீதியாக, பாலின ரீதியாக, உணர்வு ரீதியாக, மன ரீதியான, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வயது, சாதி, மதம், கல்வித் தகுதி, திருமண நிலை, கலாச்சாரம், இனம் போன்ற எந்த பாகுபாடுன்றி உதவி புரிந்து பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன. கற்பழிப்பு முயற்சி பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை, கடத்தல், கௌரவம் தொடர்பான குற்றங்கள், திரவக தாக்குதல்கள் அல்லது சூனிய வேட்டை போன்ற எந்த விதமான வன்முறையை எதிர்கொள்ளும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இம்மையம் ஆதரவளிக்கும்.

தனியார் மற்றும் பொது இடங்களில், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைந்த ஆதரவையும் உதவியையும் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மருத்துவம், சட்டம், ஆற்றுப்படுத்துதல் மற்றும் உளவியல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் உடனடி, அவசர மற்றும் அவசரமற்ற நிலையில் எளிதாக அணுகி பெற்றிடவும், பெண்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறைக்கும் எதிராக போராடவும் இம்மையம் வழிவகுக்கிறது.

சாதி, வகுப்பு, மதம், பிராந்தியம், பாலியல் சார்பு அல்லது திருமண நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், வன்முறையால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் உட்பட அனைத்துப் பெண்களையும் ஒருங்கிணைந்த சேவை மையம் ஆதரவு அளிக்கிறது. 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை, சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2000 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012 ஆகியவற்றின் கீழ் நிறுவப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அலுவலர்களுடன் இணைத்திட ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் இம்மையங்கள் இந்திய அரசின் 100% நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகின்றன.

பின்வரும் சேவைகளுக்கான அணுகலை ஒருங்கிணைந்த சேவை மையம் எளிதாக்குகின்றன.

1. அவசரகால உதவி மற்றும் மீட்பு சேவைகள்

2. மருத்துவ உதவி

3. முதல் தகவல் அறிக்கை / வன்முறை நடைப்பெற்ற அறிக்கை ஆகியவற்றை பதிவு செய்திட பெண்களுக்கு உதவி

4. உளவியல்-சமூக ஆதரவு/ஆற்றுப்படுத்துதல்

5. சட்ட உதவி மற்றும் ஆலோசனை

6. தங்குமிடம்

7. இணைய வழி காணொலி காட்சி