குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006
இந்தியச் சட்டத்தின்படி குழந்தைத் திருமணம் என்பது பெண்ணின் 18 வயதுக்குக் குறைவான பெண் அல்லது ஆண் 21 வயதுக்குக் குறைவான ஆணுக்கு நடைபெறும் திருமணமாகும். பெரும்பாலான குழந்தைத் திருமணங்கள் வயது குறைந்த பெண்களுக்கு நடைபெறுகின்றன. அவர்களில் பலர் ஏழ்மையான சமூக-பொருளாதார நிலைமை மற்றும் விழிப்புணர்வு இல்லாதவர்கள் ஆவர்.
குழந்தை திருமணங்களை ஒழிக்க அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களால் முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டாலும், இந்தியாவில் இன்னும் இது ஒரு பொதுவான நிகழ்வாகவே உள்ளது,. சமுதாயத்தில் குழந்தை திருமணங்களை ஒழிப்பதற்காக, இந்திய அரசு, முந்தைய சட்டமான குழந்தை திருமண தடைச் சட்டம், 1929 ஐ ரத்து செய்து, குழந்தை திருமண தடைச் சட்டம், 2006 ஐ இயற்றியது., இந்த சட்டத்தில், குழந்தை திருமணங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாதுகாக்கவும் நிவாரணம் வழங்கிடவும் வழிவகை உள்ளது மற்றும் அத்தகைய திருமணங்களுக்கு உடந்தையாக இருந்த ஆதரவு அளித்த அல்லது நடத்தி வைப்பவர்களுக்கு தண்டனை அதிகரித்து வகுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தை செயல்படுத்துதல்
இச்சட்டத்தை அமல்படுத்த, தமிழ்நாடு அரசு 30.12.2009 அன்று மாநில விதிகளை வகுத்து அறிவித்தது. இச்சட்டத்தை திறம்பட செயல்படுத்த ஒவ்வொரு மாவட்டத்தின் மாவட்ட சமூக நல அலுவலர் குழந்தை திருமண தடுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். குழந்தை திருமணத் தடுப்பு அலுவலர்களுக்கு, எந்தவொரு தகவல் தொடர்பு முறையின் மூலமாகவும், பெறப்படும் எந்தத் தகவல்களின் மீதும் நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட நீதிமன்றத்தில் குழந்தைத் திருமணத்தை ரத்து செய்யக் கோரியும் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கோரியும் மனு தாக்கல் செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. கிராமப்புறங்களில் நடக்கும் குழந்தைத் திருமணங்கள் குறித்து புகார் தெரிவிக்கவும், தடுக்கவும் ஊராட்சி தலைவர்கள் தலைமையில் ஊராட்சி அளவிலான மையக்குழு அமைக்கப்பட்டுள்ளன.
குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள்:
1. பொம்மலாட்டம், தெரு நாடகம், பேரணிகள், கருத்தரங்குகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைத் திருமணம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
2.குழந்தை திருமணத்தின் தீமையிலிருந்து பெண் குழந்தைகளைப் பாதுகாக்க, குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு அனைத்து துறையினருக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
3. தமிழக அரசு பெண் குழந்தைகளின் கல்வியை மையமாக வைத்து செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் திருமண உதவித் திட்டங்கள் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியடையும் போது பயனடையும் வகையில், குழந்தை திருமணங்களை ஒழித்திடும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
4. UNICEFன் நிதியுதவியுடன் குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் 15 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு துறைகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய பிற அமைப்புகளுக்கு புரிந்துணர்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
5. சட்டம் மற்றும் விதிகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டன, இதன் மூலம் பொதுமக்களிடையே சட்டம் மற்றும் விதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தை திருமணத்தை ரத்து செய்தல் மற்றும் செல்லாத தன்மை ஆக்குதல்
குழந்தை திருமணம் நடைப்பெற்ற குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்த நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் குழந்தைத் திருமணத்தை ரத்து செய்து கொள்ளலாம். குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மட்டுமே செல்லாத தன்மை அல்லது திருமணத்தை ரத்து செய்ய மனு தாக்கல் செய்ய முடியும். சில சூழ்நிலைகளில், குழந்தை திருமணம் செல்லாது மற்றும் இரத்து செய்திட இயலும்.






